Friday, May 15, 2009

நாம் என்ன செய்யப்போகிறோம்?

தீபத்தை ஏற்றுவது போல
தீக்குண்டுகளை இயக்கி
உடல் சிதறப் புறப்படும்
பெண் பிள்ளைகளை
எந்தச் சர்வாதிகாரம்
வீழத்த முடியும்?

மொழி நில உரிமைகளில் நம்
எருமைத்தனம் செய்த கேட்டைத்
துடைக்கும் நாள் பக்கத்தில்
கண்ணில் இருக்கிறது
நண்பர்களே
கனவு பலிக்கும் காலம்.

விண்ணை முட்டும் ஈழக்கொடி
பகை மண்ணதிரப் பறக்கும்நாளில்
வெட்கமற்று வந்துநிற்கும் இந்தத்
துரோகப்புழுக்கள் நம் தம்பியை
உச்சி முகர்ந்து மெச்சிநிற்கும்.

இன்றைய துயர் பொழுதில்
என்ன செய்யலாம்?
நகங்களில் குருதி உறைந்திருக்க
கண்களில் குழிகளே எஞ்சியிருக்க
மலக்குடலில் ஈமொய்க்கும்

மொத்தப்பிணங்களில், நம் பெண்கள்
தன் வீட்டு ஆண்களைத் தேடிக்
கண்டெடுத்துப் புதைக்கின்றன.
வதைத்துத் சிதைக்கப்பட்டு
சுருட்டிப் புதைக்கப்பட்ட
காணாப் பிணமாகக்
காதலியை தாய்தங்கையை
கண்டுகதறும் ஈழ மகனுக்கு
உயிர் கூட மிச்சமில்லை.

பயந்து பதறிப் புதைந்த குழந்தையின்
பிஞ்சுப் பூங்குரல்
மண்ணெங்கும் தேம்பியழ
கொத்துக்குண்டுகளில் சிதறிய
குடும்பமாய் நம்மவர்களின்
சதைத் துண்டுகள்.

நாம் என்ன செய்யலாம்?
ஐயகோ ஐயகோ எனக்
கக்கத்தில் இருப்பவர்க்குக்
கடுதாசியும் தீர்மானமும்
“சும்மாங்காச்சுக்கும்” என்ற
பின்குறிப்போடு எழுதும் ஒருவரை
உடன் பிறப்புகள் நம்புகின்றனர்.

பேச்சுவார்த்தை மூலம்தான்
தீர்வென்று செல்லிவிட்டால்
நடுவணரசு நீடூழி வாழ்கவெனப்
புகழும் ஒருவரைத் தொழுபவர்களே!
பேச்சுவார்த்தைக்கு உங்கள்
மத்திய அரசு
சோடா வாங்கி அணுப்புகிறதா
ரேடார்தானே அணுப்புகிறது?

பதவி ஆசையை மன்னிக்கலாம்
நண்பர்களே! உறவுகளே!
நமது ஈழப் போராட்டத்தை
ஆதரித்து ஒரு வார்த்தைபேச
உடன் வந்து களம்நிற்க ;
முதல்வரின் குடும்பத்
துணைக்கண்டத்தில் ஒருவர் கூட
இல்லையே உடன்பிறப்புகளே!

இந்தச்சிக்கல்
பதவிக்காலமற்ற நாளில்
வந்திருக்கக்கூடாதா என
இன்றைக்கு ஏங்கிவிட்டு பிறகு
நம்படைக்கு தலைமையேற்க வருவார்.
உடன்பிறப்புகளே!

பதவி ஆசை சரி இருக்கட்டும்,
தீக்குளித்த தங்கங்களும்
தமிழகத்துக் கொந்தளிப்பும்
செய்தியாகச் சொல்லவும்
முதல்வரின் செய்தியலைவரிசைக்கு
மனமில்லாமல் போனபின்னும்
நம்பணுமா உடன்பிறப்புகளே?!

நிகழ்காலச் சாணக்கியத்தை
ஒற்றைத் தீக்குச்சியாய்
மோதியழித்த சுரும்புலியாய்
முத்துக்குமரன் சிதைந்தானே புரியலையா?
உங்கள் ரத்தம் கொதிக்கலையா?

“போர் என்றால் சாவு விழும்
தமிழர் சாவது சரியென்று பேசும்
“பெண்” களங்கப் பிறப்பொன்றை
இதயக்கனியின் இடத்தில்
ஏற்றிவைத்த ரத்தங்களே
உங்களுக்குச் சம்மதமா?

நாய்துரத்த ஓடுகிறது குழந்தை
நாயை அணைத்துக் கொஞ்சி
குளிரூட்டிய மாளிகையில் அமர்ந்து
கண்டிக்கிறார் குழந்தையை
“கல்லைக் கீழே போடு குழந்தாய்
அப்போதான் அம்மா நான்
ஆதரவாய் வருவேன் என்று.
அவரவர்கள் சாதித்துவிட்டார்கள்
ஆயிரம் தலைமுறைக்கு
அரச வாழ்க்கை கண்டுவிட்டார்
ரத்தத்தின் ரத்தங்களே!
உடன்பிறப்புகளே! நீங்கள்
தொண்டராய் இருந்து
என்ன சாதித்தீர்கள்??
களத்திற்கு வாருங்களேன்
கரம் சேர்த்து ஈழம் காக்க.

“பிணங்களான பிறகும்
புணர்ந்துபோகும் ராணுவநாயை
எப்படியாவது கொன்றுபோடேன்”
பெண்பிள்ளை அழுகுரல்
உங்களுக்குக் கேக்கலையா?
உயிர்வாழத்துடிக்கும்
ஈழப் பிள்ளைகள்
நம் உள்ளங்கையில்
முகம்புதைத்து அழுவது
கைகளில் கனக்கலையா?

எங்களை அலற அலறவிட்டுச்
சிதைத்தவரைப் பார்த்து
தாய்த் தமிழகமே மொத்தமாய்
மூச்சுவிடேன் பற்றட்டும் நெருப்பென
இளையோர் ரணங்கள்
உங்கள் நெஞ்சில் தெறிக்கலையா?
தங்கப் பூம்பாதம்
தண்ணிபடக் கொப்பளிக்கும்
பிஞ்சுக் குழந்தைகள்
வெடித்துச் சிதறக் கண்டும்
தொண்டுசெய்து தொண்டுசெய்தே
உணர்ச்சியற்றுப் போனீர்களா?

கரம்கோர்த்து ஈழம்காக்க
களத்திற்கு வாருங்களேன்
இதயத்துத் தமனிகளே
இனமானச் சொந்தங்களே
நாம் என்ன செய்யப்போகிறோம்?

மூன்று லட்சம் சொந்தங்கள்
மரணக் குழியில் மயங்க
இத்தாலியப் பெண்ணை
அன்னையென்று மலர்தூவி
தொப்பூழ்கொடி உறவுகளின்
இழவிற்கு மகிழ்பவர்களை
நாம் என்ன செய்யப்போகிறோம்?

இனமே அழியட்டும்
கூரைமாற்ற உதவுவோம் என்பவர்
வேண்டுதல் குருடர்கள்
கண்திறக்க மறுப்பவர்கள்
வீம்பிற்குச் சிங்களரின்
பாதம் நக்கிச் சிரிப்பவரின்
புறம் கழுவும் பூசாரிகளாய்
இங்கே கதர்வேட்டிகள்.

186 பேர்சுடப்பட்டதற்காக
மாதக்கணக்காய் அலறுகிறார்
கழிவறையில் இருக்கும்போதும்
கண்டித்தபடியே இருக்கிறார்.
பிரான்சு அதிபரிடம்
சீக்கிய டர்பனிற்காக
உருகிவேண்டும் ஒருவருக்கு
தமிழர் மரணஓலம்
மகிழ்ச்சியாய்ப்படுகிறது

ஆயுதத்தைக் கீழேபோட்டால்
அமைதிபேசுவோம் என்னும்
அறிவாளிகளே!
தமிழக மீனவன் எந்த
ஆயுதம் கொண்டு மீன்பிடிக்கிறானாம்?
அதுசரி நீங்கள்
கோஷ்டிச் சண்டையைக் கீழே
போட்டதுண்டா? போட்டுத்தான்
வாக்குக்கேட்டு வருகிறீர்களா?

முதுகெலும்பே இல்லாதவர்
முதுகில் வலியென்றும்
இருதயமே இல்லாதவர்
இருதய அறுவை என்றும்
ஒருசேரச் சொல்வதுதான்
நடுகல்லும் சிரிக்கும் அதிசயம்.
ஆயுதங்களைப் பார்த்துப்பேச
தைரியம் அற்றவர்கள்
கவசங்களைக் கழற்றச்சொல்லி
கத்திக் கொண்டிருக்கிறார்கள்
முப்பத்தைந்து வருசமாக.

இதயத்துத் தமனிகளே
இனமானச் சொந்தங்களே
கோரிக்கைகள் யாரைநோக்கிக்
கேட்கப்படுகிறதோ அதுதான்
வெற்றிதோல்வியைத்
தீர்மானிக்கும் நண்பர்களே!

எவர் வாயிலிருந்து நமது
ரத்தமும் சதையும் வழிகிறதோ,
குட்டிமனியின் கண்கள்
வெறித்து விழிக்கிறதோ
அவர்களிடம் கேட்கிறோம் நாம்
போர்நிறுத்தத்தை ஈழத்தை.

சட்டக்கல்லூரிச் சண்டையை
தடுக்க நினைக்காதவர்களா
இலங்கைச் சண்டையை
நிறுத்தப் போகிறார்கள்?
செத்துக் கொண்டிருக்கும்
இந்தியத் தமிழனைக் காப்பாற்றாத அரசா
இலங்கைத்தமிழரைக் காக்கப்போகிறது?

இறையாண்மை என்னும்
யோக்யதை இல்லாதவர்
இன்னொருவன் இறையாண்மைபற்றி
இங்கேதான் பேசுகிறார் சொந்தங்களே!
தன்னாட்டுக் கடைசி மனிதரையும்
காப்பாற்றுவது இறையாண்மை
மும்பையில் நீ முட்டாளானதை
உலகம் கண்டு கொண்டது.
தமிழகக் கடற்கறையில் நீ
தெரிந்தே பெட்டையாய் நிற்கிறாய்.

சிங்களன் இயக்கும் துப்பாக்கிகள்
இந்திய இறையாண்மையைக்
கிழித்து நிர்வாணமாக்குவதை
ரசிக்கும் மேதைகள் நீங்கள்;
தேச உணர்வோடு சர்வாங்கமும்
கூசும்பேதைகள் நாங்கள்
நான் சொல்லவில்லை தமிழனின்
வாயாம் சீமான் சொல்லவில்லை.
சிங்களக் கடற்படைக்கூலியாளும்
காசுக்கு மாரடிக்கக்
கப்பலில் வந்தவனும்
கைகொட்டிச் சிரிக்கிறார்கள்
காங்கிரஸ் கெடுத்த இறையாண்மையை

இதயத்துத் தமனிகளாய்
கரம் கோர்த்துத் துணைநிற்கும்
இனமானச் சொந்தங்களே!
ஒரு நாய்க்கு நாம்
வாக்களித்திருந்தாலும் அது
நமக்காகக் குரைத்திருக்கும்; நமை
விரல்நீட்டினாலே கடித்திருக்கும்.
போட்டா நாய் வாயில்
போடா விட்டால் பேய்வாயில் என
விட்டேத்தியாய் நாம் செய்தபாவம்
நம்தலையில் மட்டுமின்றி
ஈழத்தலையிலும் வெடிக்கிறதே,
நாம் ஏற்றிவைத்த நாற்காலிப்புழுக்கள்
நமக்காகத்துடிக்கும் நல்லாரையும்
பிரித்துவைத்துக் கெடுக்கிறதே

மூன்றுகட்சித் தொண்டர்களே!
நம்பிக்கிடக்கும் நல்லவர்களே!
இன்றைய தமிழகத்தில்
தேசியம் பேசும் தமிழன்
ஒருவன் முட்டாள்
இன்னொருவன்
பத்துக்கோடித் தமிழருக்கும்
பச்சைத் துரோகி.

ஓங்கியயழுந்த போராட்டமும்
ஆறுமாத வேதனையும்
எந்தச் சாவையும் தடுக்கவில்லை
தமிழன் ஒருவனைக் காக்கவில்லை.
குப்பிகடிக்கும் போராளி
ரவையின்முன்பு வயசுப்பிள்ளை
பதுங்கு குழியில் சிறுபிள்ளை
ரத்தஉறவு நாதியற்றுக் கிடக்க ;
ஆயுதமாய் கவசமாய்
நம்குரல்கள் மாறலையே!

துண்டுபட்ட கையை
நாயிழுக்குமென
தானெடுத்துப் புதைத்துவிட்டு
ஓலமிட்டு அழும்பிள்ளைகள்.
உங்கள் பிள்ளைகள்
உங்கள் வீட்டுப்
பெண்களுக்கு எவனோ
கருக்கலைப்புச் செய்கிறான்
என்ன செய்யப் போகிறீர்கள்?!

ஈழக்கொடி மக்கள் காக்க
இவனைப் போகவைக்கணும்
சேருங்கள் சொந்தங்களே!
நமக்கான எண்ணங்களோடு
நமக்கான உரிமைக்குரலோடு
எந்த இடியாலும் அசைக்கமுடியாத
சுரணையற்ற மக்களுக்கான
அக்கறையோடும் ;
கொந்தளிக்கும் முத்துக் குமரன்களை
தேடிச்சேருங்கள் நண்பர்களே!

எவனெவனின் உள்ளாடைகளையும்
ஏந்திக்கிடக்கும் நமது
இளைய போர்வாள்களைத்
துடைத்து எழுப்புங்கள் உறவுகளே!
பதுங்கு குழிக்குள்
தொலைக்காட்சி வைக்கப்படும்
போரின் சத்தத்திலிருந்து
மக்களைக்காக்க இலவசப்
பஞ்சும் பாட்டுப்பாடும்.

குண்டுவிழும் வைத்தியசாலையில்
இலவச உணவும்
இறந்தவர் குடும்பத்திற்கு என்
சொந்தப் பணத்திலிருந்து
இழவுக் காசும் வழங்கப்படும் என
தீர்வுத் திட்டங்கள்
முன்வைக்கப்படும் முன்பு ;
முத்துக்குமரன்களைத்
தேடிச் சேருங்கள் நண்பர்களே!

கட்டியழ நாதியற்ற கூட்டமானோம்;
தொட்டுத்தூக்க மக்களற்ற பிணங்களானோம்
எத்திச்செல்லும் நாட்டில் உசிரு
பத்திச்சாவுது மொத்தமா அதத்
தடுக்கப்பார்த்தும் ஏலாமத்தான்
வதைபடுறோம் மிச்சமா?

பேரணியா நாமநின்னா
மாட்டுமந்தன்னு தள்ளுரான்
உரிமைகேட்டு உயர்த்தும் குரலை
தாலாட்டுன்னு தூங்குறான்.
முட்டித்தூக்கும் கொம்புகளையே
சுகமெனச் சொரியும் நோயாளி இவன
எளிய சனமும் அலறச்செய்யனும்
வழிகண்டு நாம போராடணும்.

யுகங்களைத் தின்று கடற்கோளைப்
புறந்தள்ளித் தகித்தோடும்
காட்டாறு நம் தமிழ்ரத்தம்
அதில் ஒரு சொட்டு உலகில்
மிச்சமுள்ள வரையில்
தோற்காது நமது போராட்டம்.
எல்லாப் பகையும்
பொல்லாத் துரோகமும் நம்
செருப்பினுள் மிதிப்பட்டுக் கிடக்கணும்.
நல்லது கெட்டது நாலும் தெரிந்த
போராளியாய் பிள்ளை வளர்க்கணும்.

கட்டியழச் சொந்தமுண்டு
தொட்டுத்தூக்க மக்களுண்டு
விதைகுழியில் விழுந்ததெல்லாம்
விருட்சமாக்கும் (தமிழ்) மண்ணுண்டு
பிரச்சனை எதுவும் தீரக்கூடாதென்னும்
ஒற்றைப் புள்ளியில் அரசியல். அதில்
மாட்டிக் கொண்டவர் தடம்மாறலாம்.
நம்மைநாமே காத்து நிற்கணும்.

தயவு செய்து ஒற்றுமையாய்
ஈழம் காக்க நில்லுங்கள்
துரோகக் கட்சிகளைத்
தீர்த்துக் கட்ட
இணைந்து நில்லுங்கள்!
- கலை இலக்கியா
-தேனியில் நடைபெற்ற “ஈழத்துயரமும் தீர்வும்” பாவரங்கத்தில் (கவியரங்கம்) படிக்கப்பட்ட பா இது

Tuesday, April 28, 2009

கேக்குரவன் கேனயனாக இருந்தால்.............

www.tamilnathy.blogspot.com வலைப்பதிவில் இக்கட்டுரையினை எழுதியவர் தோழர் தமிழ்நதி

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் காட்டும் செப்படிவித்தைகள் தாங்கமுடியவில்லை. கரணம் அடிக்கிறார்கள். கயிற்றில் நடக்கிறார்கள். நெருப்பு வளையத்துக்குள் பாய்கிறார்கள். சித்திரக்குள்ளர்களாகி சிரிப்பு மூட்டுகிறார்கள். காற்றில் கைவீசி பூ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். கட்டப்பொம்மனாகி மீசை துடிக்கப் பேசுகிறார்கள். ஜான்சிராணியாகி வாளை வீசுகிறார்கள். பெவிலியனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் வளர்ந்த குழந்தைகள் கைதட்டிக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதறியாமல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த உச்சக்கட்ட நிகழ்ச்சி நேற்று அரங்கேறி முடிந்தது. ‘உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர்’கலைஞர் கருணாநிதி அவர்கள், இலங்கைத் தமிழருக்காக ‘உண்ணாவிரதம்’ இருந்ததுதான் கலையிரவிற்கே மகுடம் வைத்த நிகழ்ச்சி. ‘ஓட்டுக்காக உடம்பிலிருக்கும் கடைசித் துணிவரை கழற்றிப்போடுவதென்று சங்கற்பம் செய்துவிட்டார்களா என்ன!’ என்று வியக்கத் தோன்றுகிறது.ஈழத்தில் எத்தனை எத்தனைக் குழந்தைகள் சிதறு தேங்காய்போல தலைசிதறிச் செத்தார்கள். கர்ப்பத்தினுள்ளிருந்த குழந்தைகூட காயப்பட்டது. பசியில் சிறிதுசிறிதாக மாண்டுமடிந்தவர்கள் எத்தனை பேர். எலும்பும் தசையும் குருதியுமாய் பிரிந்து கூழாகித் தரையோடு தரையாக வழிந்தோடிய உடல்கள் எத்தனை. ‘ஐயோ ஐயோ’வென்று உயிர்பதறி காடுகளில் அலைந்து பித்தாகிப் பிதற்றியழுதன எமது சொந்தங்கள். கட்டிடங்களின் இடிபாடுகளுள் கிடந்து ‘காப்பாற்றுங்கள்’என்று கத்தி கடைசிநம்பிக்கையும் வற்றி வான்பார்த்து உறைந்த கண்கள் எத்தனை.. சொல்லொணா, எழுதவொண்ணாக் கொடுமைகளை எங்கள் சகோதரர்கள் அனுபவித்தபோதெல்லாம், கண்ணப்பநாயனார் சிவபெருமானைக் கட்டிக்கொண்டிருந்ததைப் போல இரவும்பகலும் நாற்காலியைக் இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்! கொன்று பாடையேற்றிவிட்டு ஊர்வலத்தில் மலர்தூவுவதுபோலிருக்கிறது இந்தப் படுபாதகச் செயல்!
இன்று தினந்தந்தியில் வெளியாகியிருக்கும் தலைப்புச் செய்தி இதுதான்: “மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார் . கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி... போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு”
போதாக்குறைக்கு, ‘இலங்கையைப் பணியவைத்த உண்ணாவிரதம்’என்ற தலைப்புடன் கலைஞர் களைத்துப்போய் படுத்திருப்பதான ‘பரிதாபகரமான’புகைப்படங்கள் ஒரு முழுப்பக்கத்தில் வெளியாகியிருந்தன.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நாடகமாக இது அறிவிக்கப்படவேண்டும். இலங்கை அரசு - இந்திய மத்திய அரசு – தமிழக மாநில அரசு என்ற மூன்று அரசுகள் இணைந்து நடத்திய நாடகம் நன்றாகத்தானிருக்கிறது. ‘நான் அடிக்கிறது போல அடிக்கிறேன்.. நீ ங்கா ங்கா என்று சத்தமிட்டு அழு’என்று சொல்லிவைத்து எல்லாம் நடப்பதை அறிந்தவர் அறிவர். இந்திய அரசு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து இலங்கையில் போரை நடத்துகிறது. அதே இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லி ராஜபக்சேயைக் கேட்பதற்காக கொழும்புக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்புகிறது. ‘நான் ஒரு விசயம் தீர்மானிச்சுட்டா அப்புறம் என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்’என்று போக்கிரியில் விஜய் வசனம் பேசியது நினைவில் வந்து தொலைத்தது. தானே நடத்தும் போரை நிறுத்த, தானே கொழும்புக்குப் போகும் வேடிக்கை வேறெங்கும் நடப்பதற்குச் சாத்தியமில்லை. இதைத்தான் ‘கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எருது ஏரோப்ளேன் ஓட்டுமாம்’என்று சொல்வார்கள். மக்களெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய அசடுகள், மகா மறதிக்காரர்கள் என்ற நம்பிக்கையில்லாமலா இதுவெல்லாம் நடக்கிறது?
தேர்தல் குறிகாட்டி அ.தி.மு.க.பக்கம் திரும்பவாரம்பித்துவிட்டது என்ற பயத்தின் விளைவே உண்ணாவிரதம் என்ற உச்சக்கட்டக் காட்சிக்குக் கலைஞரை உந்தித்தள்ளியது. கடைசி ஆட்டத்தையும் ஆடிப்பார்த்தாகிவிட்டது. (இவர்களைச் சொல்லமுடியாது. இதற்கு மேல்கூட நகைச்சுவைக் காட்சிகள் இருக்கக்கூடும்.) மாநில அரசாங்கத்தின் முண்டுகொடுப்பு இல்லாமல் போனால் மத்திய அரசு கவலைக்கிடமாகிவிடும் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அவர்களைக் கிண்டினார். ‘அன்னை’சோனியாவும், மதிப்பிற்குரிய மன்மோகன்சிங்கும் ராஜபக்சேவைக் கூப்பிட்டு ‘நிறுத்துகிற மாதிரி நடி. தேர்தலுக்குப் பிறகு அடி’என்றார்கள். ‘அப்படியே ஆகட்டும். கனரக ஆயுதங்களால் அடிக்கவில்லை. சுட்டே கொன்றுவிடுகிறேன்’என்றிருக்கிறார் ராஜபக்சே. அதாவது, ‘கத்தியால் குத்தினால்தானே காயம் வரும்; நஞ்சுவைத்துக் கொல்கிறேன்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார் இலங்கையின் அதிமேன்மை பொருந்திய ஜனாதிபதி அவர்கள். (துப்பினால் எச்சில் வீணாகிவிடும்)
நேற்று ‘கலைஞர்’செய்தியில் அருமையான காட்சிகளைக் காணமுடிந்தது. பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, கவிஞர் கனிமொழியும், தளபதி ஸ்டாலினும் கவலையோடு தந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜாத்தி அம்மாளும் தயாளு அம்மாளும் அருகிலிருக்கிறார்கள். கலாநிதி, தயாநிதி மாறன்கள் ‘இந்த மட்டில் பிழைத்தீர்களே’என்று ஆற்றாமை பொங்க அருகில் நிற்கிறார்கள். இயக்குநர் பாலச்சந்தர், கவிஞர் வாலி கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். ‘எங்க குல சாமி நீங்க’என்று வழக்கம்போல வைரமுத்து வந்து நிற்கிறார். சுப.வீரபாண்டியன் (நீங்களுமா…?) ‘சாதித்துவிட்டீர்கள் ஐயா’என்பதான புன்னகையோடு ஓரத்தில் நிற்கிறார். ‘எங்களையெல்லாம் பார்த்தால் அவ்வளவு கேனையன்களாகவா தெரிகிறது?’என்று கேட்கவேண்டிய மக்களில் ஒரு பகுதி கலைஞரைப் பார்க்க அலைமோதுகிறது.
ஆக, கலைஞரின் உண்ணாவிரதத்தினால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றொரு பிம்பத்தை மக்கள் மனதில் ஓரளவிற்கேனும் கட்டமைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆட்சியிலிருப்பவரின் அரைநாள் பட்டினிக்கே இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்துமளவிற்கு வலிமை இருக்கிறதென்றால் அதை ஏன் முன்னமே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான மக்கள் செத்துமடிந்தபின், இலட்சக்கணக்கானவர்கள் கண்ணீர் சிந்திச் சாபமிட்டதன் பின் உண்ணாவிரதம் இருக்கவேண்டியதன் அவசியந்தான் என்ன? அப்படியென்றால் ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் கலைஞருக்கும் பங்கிருக்கிறது. கொலைகளைத் தடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தும், கைகட்டி, கால்பிடித்துப் பார்த்திருப்பதும் கொலைசெய்தலுக்கு ஈடான குற்றந்தான்.அமெரிக்கா மறைமுகமாக அச்சுறுத்திவிட்டது. ஐரோப்பிய நாடுகள் இனவழிப்பைக் கண்டித்து தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பவாரம்பித்திருக்கின்றன. மத்தியில் அரசு சரிந்துவிடும் என்பதோடு, இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் இந்தியாவின் இறைமை என்னாவது? என்ற கிலி இந்தியாவைச் சூழவாரம்பித்திருக்கிறது. ‘இந்த அடி அடிக்கிறான் என்னய்யா பாத்துக்கிட்டிருக்கே’என்று அமெரிக்கா புருவம் தூக்குவது இந்தியாவின் இந்துசமுத்திரப் பொலிஸ்காரன் சீருடைக்கு ஏற்புடையதன்று.
‘கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததாம்’, ‘குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை’போன்ற பழமொழிகளை இங்கே நினைவுகூர்தல் நன்று.
பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு வகையான போராட்டங்களை ஈழத்தில் போரை நிறுத்தும்படியாகக் கேட்டு நடத்திவருகிறது. சூழ்ச்சிக்கு அஞ்சி கட்சிமாறிய வைக்கோ அன்றிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஈழத்திற்கு ஆதரவாகவே பேசிவருகிறார். மத்தியும் மாநிலமும் ஆட்டம் காணும் என்றறிந்ததும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட மருத்துவர் ராமதாஸ் சுயநலத்துடன்கூடிய பொதுநலவாதியாக மாறியிருப்பதும் மகிழ்ச்சியே. ஓட்டுக்காக என்றாலும், ‘சாமியா பேசுவது’என்று யாவரும் வியந்து பார்க்கும்படியாக ஈழ ஆதரவுக் கருத்துக்களை நாளாந்தம் உதிர்த்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா அவர்களின் குரலுக்கு இன்றைய சூழலில் மரியாதை இருக்கவே இருக்கிறது. தன்னுடலில் மூட்டிய தீயால் இலட்சக்கணக்கான தமிழகத்தாரின் இதயங்களில் விழிப்பு என்ற சுடரை ஏற்றிவைத்துப்போன முத்துக்குமார், அவன் வழியில் தம்முயிரை ஈகம் செய்த ஏனையோர், ‘எங்கள் இரத்தமய்யா… எங்கள் இரத்தம்…’ என்று ஊர்வலங்களையும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழக சகோதரர்கள், உண்ணாவிரதம் இருக்க அரசு இடமளிக்காதபோது அலைந்து திரிந்து, ‘தாயகத்தில்’பதினொரு நாட்கள் பசித்துக் கிடந்த பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட மனிதாபிமானமுள்ள பெண்கள், எப்போதும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் கவிஞர்கள் தாமரை, அறிவுமதி, சிறைசென்ற சீமான், அமீர், கொளத்தூர் மணி, சம்பத், விருதைத் திருப்பியளித்த பாரதிராஜா, திரைத்துறையினர், பிரான்ஸ், கனடா, இலண்டன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ‘எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள்’என்று அவ்வந் நாடுகளின் ஆட்சியலுவலகங்களின் முன் தொடர்போராட்டங்களை நடத்திவந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருடைய உணர்வுகளின் மீதும், தியாகங்களின் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போலிருக்கிறது ‘கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிப்பு’என்ற செய்தி. மேலே பட்டியலிடப்பட்டிருப்பவர்கள் ஒன்றுமே செய்யவில்லை; கலைஞரின் அரைநாள் பட்டினிதான் அவ்வளவு பெரிய விடயத்தைச் சாதித்திருக்கிறது என்பது எத்தனை பெரிய கயமைத்தனமானது. இப்படியெல்லாம் நடக்கக்கூடுமெனில், எருது ஏரோப்ளேன் ஓட்டுவதொன்றும் ஆச்சரியமில்லை.
வெயிலைவிடக் கொடுமையாக எரிக்கிறது பிணங்களின் மீது அரசியல் செய்பவர்களின் வார்த்தைகள்.
‘மக்கள் இனியும் முட்டாள்கள் இல்லை’என்பதைத் தேர்தல்முடிவுகள்தான் தெளிவுபடுத்தவேண்டும்
. எல்லா அற்பத்தனங்களையும், கயமைகளையும், தகிடுதத்தங்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் வரலாறு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ, மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜபக்சே பாடம் கற்பிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

Saturday, February 21, 2009

வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட...

பாடல்-பண் : தலித் சுப்பையா



பல்லவி : வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட கள்ளப்பிள்ளை காங்கிரசு

இத்தாலிப் பெண்மணியின் ஏவல்படையாய் மாறிப்போச்சு.

அ.பல்லவி : ஊருக்கு நாளுபேரு கணக்குங்க - சும்மா

பேருக்கு காங்கிரசு இருக்குங்க. (வெள்ளை)

சரணம் 1 : காமராசர் செல்வாக்குல ஆண்டது - பிறகு

கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆனது

குருடனுக்கு ராசபார்வை கிடைக்குமா - கை

தமிழகத்தை ஆளும்கனவு பலிக்குமா (வெள்ளை)

சரணம் 2 : அரசியலில் காங்கிரசு சாக்கடை - இரு

கரைகளாக கழகங்கள் வெளிப்படை

மாறி மாறி பிச்சைவாங்கி செயிக்குது - இதில்

மான ஈனம் ஏதுமின்றி குரைக்குது! (வெள்ளை)

சரணம் 3 : கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது - நம்

கடல்மக்கள் உரிமைகளை பறிச்சது

சிங்களப்படை மீனவரை கொல்லுது - இதை

தடுத்துநிறுத்தத் துப்பில்லாமல் மழுப்புது (வெள்ளை)

சரணம் 4 : அழிவுப்படை ஈழத்துக்கு போனது - அங்கு

அடிபட்டு அசிங்கப்பட்டு மீண்டது

எறிந்தபந்து எதிர்த்திசையைத் தாக்குமே - அதைத்

தமிழகத்தில் நாமெல்லோரும் பார்த்தோமே. (வெள்ளை)

சரணம் 5 : தமிழ்ஈழ விடுதலையைத் தடுக்குது - அதன்

தலைவரையே கொன்றுவிடத் துடிக்குது

இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்குது - தமிழரை

இளிச்சவாயர் கூட்டமென்று நினைக்குது. (வெள்ளை)

சரணம் 6 : புலிகளை அழித்துவிடத் துடிக்குது - அவர்தம்

தடயமறிய ராடர்களை கொடுக்குது

படையனுப்பி பயிற்சிதந்து அழிக்குது - மூன்று

மலையாளிகள் பொறுப்பில்இது நடக்குது (வெள்ளை)

சரணம் 7 : சட்டமன்றத் தீர்மானத்தை மதிச்சதா - அதை

சலூன்கடை தாள்என்று நினைக்குதா

மனிதச்சங்கிலி லட்சம்பேரு நடத்துனோம் - எந்தப்

பலனுமின்றி தமிழினமே தவிக்கிறோம். (வெள்ளை)

சரணம் 8 : பாக்கிஸ்தானைப் பிரித்துத் தந்தார் தாத்தனார்

பங்களா தேசுக்கு காரணமே மாமியார்

ஈழத்தமிழர் அழிப்பைச் செய்தார் கணவரு - அந்த

இரண்டகத்தை சோனியாவும் செய்கிறார். (வெள்ளை)

சரணம் 9 : காங்கிரசை ஒழிக்கச்சொன்னார் பெரியாரு - அந்தக்

கடனடைக்க களமாடுது தமிழ்நாடு

தமிழ்ஈழம் மலரப்போவது நிச்சயம் - துரோகக்

காங்கிரசை ஒழிப்பதே நம் லட்சியம் (வெள்ளை)


நன்றி : புரட்ச்சிப்பெரியார் முழக்கம்

Saturday, December 13, 2008

துளிப்பா (அய்க்கூ) ப் போட்டி

சாதி, மதம், கடவுள், தீண்டாமை, சோதிடம், வாஸ்து- இவற்றிற்கெதிரான துளிப்பாக்களை அனுப்புங்கள்.முதல் பரிசு உருவா 100, இரண்டாம் பரிசு உருவா 75, மூன்றாம் பரிசு உருவா 50 ( பரிசுகள் நூல்களாக.... )
சிறந்த துளிப்பாக்கள் தெரிவு நாளைவிடியும் இதழிலும், நாளைவிடியும் வலைப்பதிவிலும் www.naalaividiyum.blogspot.com வெளியிடப்படும். ஒருவரே எத்தனை துளிப்பாக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். அனுப்பக் கடைசி நாள் 31.01.2009
முகவரி:
நாளைவிடியும்
7-ஆ , எறும்பீசுவரர் நகர்
மலைக்கோயில் தெற்கு
திருவெறும்பூர், திருச்சி 620013

மனமகன் தேவை

தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமைச் சிந்தனையாளரான, அரசுப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் 29 அகவையான பெண்ணுக்கு,மேற்படி சிந்தனையுள்ள- அரசுப் பணியிலுள்ள மணமகன் தேவை.கல்வி......:க.மு; கல்.இ; ஆய்வு நிறைஞர்.(M.A;B.Ed;M.Phil)
தொடர்புக்கு: 97888 06016

Tuesday, June 24, 2008

பெரியாரின் எழுத்தும் பேச்சும்- குடியரசு முன் பதிவுத்திட்டம்

செப்தம்பர் 17 இல் 27 தொகுதிகள் வெளிவரவிருக்கின்றன.

பெயரளவுக்கு மட்டுமே பெரியாரின் பெயரை உச்சரிப்பவர்கள்- கழக ஆட்சிகள் செய்யத்தவறிய இப்பெரும் பணியை, பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்திருக்கிறது. பெரியாரை நிலை நிறுத்த- அவரின் சிந்தனைகளை ஆவணப்படுத்தும் அரிய முயற்சி.

காரல்மார்க்சு, காந்தி, அம்பேத்கர் போன்றோருக்கு இருப்பதைப்போல காலவரிசைத்தொகுப்பு நூல் ( collected works)பெரியாருக்கு இல்லையே என்ற பெருங்கவலை இனி இல்லை

1925 முதல் 1938 வரை வெளிவந்த குடியரசு இதழ்கள் முழுமையும் தொகுக்கப்பெற்று 27 தொகுதிகளாக ( ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கு மேல்) செப். 17 இல் வெளியிடப்பெறவிருக்கின்றன.

ரூ 5400 விலையுள்ள இத்தொகுதிகள் முன்பதிவுத் திட்டத்தின் கீழ் ரூ 3500 க்கே உங்களுக்குக் கிடைக்கும்.

தொகை அனுப்பக் கடைசி நாள் 31.08.2008

பணவிடையாகவோ ( M.O) வரைவோலையாகவோ(Draft ) மட்டுமே அனுப்புங்கள்.
காசோலை ( Cheque)அனுப்ப வேண்டாம்.

T.S.MANI என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி

தா. செ. மணி
பெரியார் படிப்பகம்
மேட்டூர் அணை 1
சேலம் மாவட்டம் - 636 401

Monday, May 12, 2008

சாதிமறுப்பு, புரோகித மறுப்புத்திருமணம்

தோழர்கள் சுகுணாதிவாகர்- மு. இரா. செயந்தி ஆகியோரின் சாதி மறுப்பு, சடங்குகள் மறுப்பு, புரோகித மறுப்புத்திருமணம்
11.05.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல் விசுவகர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் தோழர் அ. மார்க்சு தலைமையேற்று நடத்திவைத்த
இத்திருமண நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ( மார்க்சிஸ்ட் ) யைச்சார்ந்த திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி மற்றும் பலர் வாழ்த்துரைத்தனர்.

Friday, May 9, 2008

பின்பற்றத்தக்க முன்மாதிரிகள்

சில நாட்களுக்கு முன் என் நன்பர் ஒருவர் ஒரு மடல் எழுதியிருந்தார். அதில், 2008-ஆம் ஆண்டு சனவரித்திங்கள் முதல் ஒவ்வொரு திங்களும் தமிழ்நாட்டிலுள்ள தாய்த்தமிழ்ப பள்ளிகளுக்கு தன்னாலியன்ற சிறு தொகையினை அனுப்பி வருவதாக எழுதியிருந்தார். அவருக்கு நம்முடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவரைப் பின்பற்றி நாமும் இது போல் செய்யலாமே !
நன்கொடைப்பட்டியல்

பாவாணர் தமிழ்வழிப்பள்ளி மார்ச் உரூ 250
1, முதல் குறுக்குத்தெரு
அட்டலெக்குமி நிழற்சாலை
பள்ளிக்கரணை
சென்னை- 601302

தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி மார்ச் உருவா 250
தாய்த்தமிழ் மழலையர் தோட்டம்
வெங்கடாபுரம்
அம்பத்தூர்
சென்னை 600 053

தாய்த்தமிழ் மழலையர் & ஏப்பிரல் உருவா 250
தொடக்கப்பள்ளி
வள்ளலார் நகர் கிழக்கு
திருப்பூர் 641 604

தாய்த்தமிழ் மழலையர் ஏப்பிரல் உருவா 250
தொடக்கப்பள்ளி
மூலக்கடை
கெஞ்சனூர் ( அஞ்சல்)
சத்தியமங்கலம்
ஈரோடு-( மா)

பாரதி தாய்த்தமிழ்ப்பள்ளி ஏப்பிரல் உருவா 250
1 ஆ- பிருந்தாவனம் தெரு
சின்னக்காஞ்சிபுரம் - 631 501

திருவள்ளுவர் மழலையர் பள்ளி ஏப்பிரல் உருவா 250
5, -324 அவ்வையார் தெரு
மேடவாக்கம் கூட்டுச்சாலை
காந்திநகர்
சென்னை 601 302

தாய்த்தமிழ் மழலையர் ஏப்பிரல் உருவா 250
தொடக்கப்பள்ளி
மடத்துக்குளம்
உடுமலை (வ)- 642 113

தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி ஏப்பிரல் உருவா 250
1, சம்பத் நகர்
சூளேசுவரன்பட்டி
பொள்ளாச்சி -6
கோவை (மா)

தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி ஏப்பிரல் உருவா 250
மாரியம்மன் கோயில் தெரு
பாப்பாநாடு
தஞ்சாவூர் ( மா.வ) - 614 626

சக்தி தமிழ்ப்பள்ளி ஏப்பிரல் உருவா 250
தில்லை நகர் கிழக்கு
தொழிற்பேட்டை
கரூர் - 4

திருவள்ளுவர் தாய்த்தமிழ்ப்பள்ளி ஏப்பிரல் உருவா 250
238-1 சி, மங்கலம் பாதை
பல்லடம் - 641 664
கோவை மா.வ


தாய்த்தமிழ மழலையர் மற்றும் மே உருவா 250
தொடக்கப்பள்ளி
தாய்த்தமிழ் வளாகம்
67 அ, பவானி நெடுஞ்சாலை
மாதையன் குட்டை
மேட்டூர் அணை 636 452

தாய்த்தமிழ் மழலையர் & சனவரி உருவா 1000
தொடக்கப்பள்ளி
கோவனூர் சாலை
நாச்சியார் கோயில்
கும்பகோணம் ( வ)
தஞ்சாவூர் மா.வ -612 602


தாய்த்தமிழ் மழலையர் & மே உருவா 250
தொடக்கப்பள்ளி
134, பாண்டியன் நகர்
திருப்பூர் 641 602
கோவை மா.வ

Wednesday, May 7, 2008

திருந்தாத கிழக்குப் பதிப்பகமும் திருத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கும்

திலீபன்

சென்ற இதழில், தமிழக பதிப்பகத் துறையில் கார்ப்பரேட் தாதாவாக வளர்ந்து வரும் கிழக்கு பதிப்பகத்தின் நூல் தயாரிப்பு முறைகேடுகள் பற்றியும், தறிகெட்டு அலையும், அதன் மோசடி விதம் குறித்தும் எழுதி, அதன் ஒரு நூல் திருட்டை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இருந்தோம்.

‘முல்லைப் பெரியாறு சில உண்மைகள்' என் நூல் திருட்டை நாம் அம்பலப்படுத்தியது தமிழக பதிப்புத் துறையினரிடமும், அறிவார்ந்த வாசகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பலரும் நமக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் இவ்வளவு கேவலப்பட்ட பின்னரும் ‘கிழக்கு பதிப்பகம்' சற்றும் கவலைப்படவில்லை. எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் தனது வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

கூச்ச நாச்சமின்றி அடுத்தவர் நூலை எடுத்து தனது பெயரை மாற்றி வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் திருந்தும் என்ற நம்பிக்கை இனியும் இல்லை.

ஆகவே முல்லைப் பெரியாறு நதிநீர், பிரச்சினைகள்' நூலில் இளுமாநில அரசுகளின் ஒப்பந்தத்தை தமிழாக்கம் செய்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் எஸ்.நாகராஜன், தனது நூலை களவாடி நூல் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர்கள் மீதும், நூல் ஆசிரியர் மீதும் விரைவில் வழக்குத் தொடர இருக்கிறார்.

இது குறித்து வழக்கறிஞர் எஸ்.நாக ராஜன் கூறுகையில், ‘ஒரு வழக்கறிஞரின் அறிவையே திருடும் கிழக்குப் பதிப்பகம் பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்று தெரிகிறது. ஆகவே அதன் மீது இன்னும் இரண்டொரு நாளில் வழக்குத் தொடர உள்ளேன் என்று கூறினார்.

கிழக்குப் பதிப்பகம் இனியாவது திருந்துமா? தனது திருட்டை நிறுத்துமா?




nandri vizhippunarvu

Friday, April 25, 2008

எது தமிழ்ப்புத்தாண்டு ?

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
-பாவேந்தர்பாரதிதாசன்

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...

-வே. மதிமாறன்





வரலாறை தன் விரும்பம் போல் கற்பனை செய்து சொல்லுகிற மோசடி அறிஞர்கள், தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிடதக்க அறிஞர்தான் இந்த ‘வாயாடி‘ நெல்லை கண்ணன்.

ஐந்தாம் வகுப்பு பையன் அஞ்சு மார்க்குகாக செய்யுளை மனப்பாடம் பண்ணி மளமளன்னு ஒப்புக்கிறானே, அந்த மாதிரி ‘திறமை‘ உள்ளவர்தான் இந்த ஆளு.

இந்த நல்லவரை விஜய் டீ.வி. ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு‘ என்கிற பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக நியமிச்சிருக்கு.

தமிழ் தொலைக்காட்சிகளில் வருகிற நடன போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் ‘ஜட்ஜாக‘ வருகிற இந்தக் கோமாளிகள், தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு மாதிரி நினைச்சுக்கிட்டு, சவடால் விடறதும், கண்டிக்கிறதும், தனக்கு முன்பு பங்கேற்பாளர்கள் பணிவாக நடந்துக்கணும், எதிர்த்து பேசக்கூடாதுன்னு ‘பில்டப்‘ பண்ணுவதுமாக இருக்கிறார்கள்.

அப்படி ஒரு ‘பில்டப் கட்டப்பஞ்சாயத்து‘ பாணி நடுவராதான் இந்த நெல்லை கண்ணன், 9-3-2008 அன்று காலை 9 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு‘ என்ற நிகழ்ச்சியிலே நடந்துகிட்டாரு.

சரி, வெறும் பில்டப்போடு போயிருந்தா பரவாயில்லை, போய் தொலையட்டும்னு விட்டுருக்கலாம். ஆனால் வரலாறை கற்பனையாவும், பாரதி கவிதையை திரிச்சி தன் இஷ்டம்போல் பயன்படுத்தி பங்கேற்ற ஒரு பகுத்தறிவாளரான ஒரு இளைஞரை அவமானப்படுத்தியதை பார்த்த பிறகும் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

பிரசன்னா என்ற ஒரு இளைஞர், ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, “பாரதி வேண்டுமானால் கடவுளை நம்பி பாட்டுப் பாடலாம், ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை“ என்ற அர்த்தப்படும்படி தன் பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

உடனே நம்ம ‘மெம்மரி பிளஸ்‘ நெல்லை கண்ணன்,“பிரசன்னா, பாரதி அந்தக் கவிதையை அப்படி பாடவில்லை. மாகாளி பராசக்தி உருசியநாட்டினிற் கடைகண் வைத்தா ளங்கே ஆகவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, என்று பாடினான். அதில் பாரதி நமக்கு சொல்லுகிற செய்தி என்னவென்றால், இங்கே இருக்கிற பராசக்தி ருஷ்ய நாட்டிற்கு ஏன் கடைகண் திறந்தால் என்றால், முயற்சியோடு வழிபட வேண்டும். ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்றார்.

அதற்கு பிரசன்னா, “பாரதி ருஷ்ய புரட்சியை பற்றி பாடிக் கொள்ளட்டும் நான் அதை பற்றி சொல்லவில்லை” என்று பேச முயற்சித்தார்.

உடனே, ‘எண் கவனகம்‘ நெல்லை கண்ணனோ, “பிரசன்னா, நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று குதித்தார்.

அருகில் இருந்த அறிவுமதி, “எதிர்த்து பேசக்கூடாது” என்று பிரசன்னாவை எச்சரித்தார்.அந்த இளைஞர் பேச அனுமதியில்லாமல் திருப்பி அனுப்ப்பட்டார்.



இதில் நெல்லை கண்ணன் செய்த மோசடிகளைப் பார்ப்போம்.

மோசடி 1: பிரசன்னா என்கிற அந்த இளைஞர் மேற்கோள் காட்டிய ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற கவிதை, பக்திப் பாடல்கள் வரிசையில் 49 வது பாடலாக ‘கேட்பன‘ என்ற தலைப்பில் பாரதி எழுதிய ‘நல்லதோர் வீணை செய்தே-அதை நலம் கெடப் புழுதியி லெறிவ துண்டோ? சொல்லடி சிவசக்தி!’ என்ற பாடலில் வருகிறது.

ஆனால் நெல்லை கண்ணன் குறிப்பிடுகிற பாடல், தேசபக்திப் பாடல்கள் வரிசையில் 52 வது பாடலாக ‘புதிய ருஷியர்-ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி‘ என்ற தலைப்பில் வருகிறது.

பிரசன்னா சொன்னது சிவசக்தி. நெல்லை கண்ணன் போட்ட முடிச்சோ பராசக்தி.‘

`என்னை முட்டாள் என்று நினைத்தீர்களா?’ என்று பிரசன்னாவிடம் ஆவேசப்பட்ட கண்ணன், ஒரு முட்டாளாகத்தான் நடந்திருக்கிறார்.

மோசடி 2: அப்படி முட்டாள் தனமாக மாற்றி மேற்கோள் காட்டிய பாடலையும், திரித்து “ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்கிறார் இந்த சைவப்பிள்ளை கண்ணன்.

இதுதான் பிள்ளைமார்களும் பார்ப்பனர்களும் சங்கமிக்கிற இடம். அந்த இடத்தில்தான் பாரதியோடு சங்கமிக்கிறார் நெல்லை கண்ணன். சிறு தெய்வ வழிபாட்டு முறையை பார்ப்பன மற்றும் உயர் ஜாதி மயமாக்குதல்.

மோசடி 3: “நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று ஒரு அப்பாவி இளைஞனிடம் வீராப்பு காட்டுகிற கண்ணன், பாரதியை அம்பலப்படுத்தி நான் எழுதிய ‘பாரதி‘ ய ஜனதா பாரட்டி‘ என்ற புத்தகத்திற்கு பதில் சொல்ல வக்கற்று, காற்றில் கத்தி சுற்றுகிறார்.

மோசடி 4: “விரைவாக அழிந்து வருகிற மொழிகளில் தமிழும் ஒன்று. என்று கேள்விபட்டவுன் நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை“ என்று தமிழக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால், தன்னால் தாங்க முடியாது என்பது போன்ற ‘பெர்பாமன்ஸ்‘ தருகிறார் கண்ணன்.

உங்க சைவ சமயத்தின் உயிர் மூச்சான தேவாரம், திருவாசக்ததை சிதம்பரம் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி 2-3-2008 க்கு முன்னால போய் பாடியிருக்க வேண்டியதுதானே? பாடியிருந்தா, தீட்சிதனுங்க வாயிலேயே குத்தியிருப்பானுங்க.
www.mathimaran.wordpress.com

Tuesday, April 22, 2008

தீண்டாமை

இடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா

நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’